சிகிச்சை முறை

நாடி பரிசோதனை

சித்த மருத்துவத்தில் நாடி பரிசோதனை என்பது காலத்தால் அழியாத நுட்பமும், துல்லியமும் மிக்க ஓர் நோய் கணிப்பு முறையாகும். நோய்களின் அறிகுறிகளை மட்டும் சுட்டிகாட்டாமல், நோய்களுக்கான ஆணிவேரை முன்கூட்டியே கண்டறியக்கூடிய ஓர் சிறந்த யுக்தியாகும். சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாட்டின்படி மனித உடலில் ஏற்படுகின்ற அனைத்து நோய்களுக்கும், வாத, பித்த, கபத்தின் தன்னிலை மாறுபாடுகளே அடிப்படை காரணம். முறையான நாடி பரிசோதனை மூலம் உடல் அமைப்பின் தன்மை, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இவற்றுடன் நோய்களின் மூல காரணங்களை கண்டறிய முடியும். இந்த நாடி பரிசோதனையானது, தற்போதைய நோய்களை பற்றி மட்டுமில்லாமல் உடல் நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கான ஓர் நுண்ணறிவையும் நமக்கு அளிக்கிறது. பாரம்பரிய மிக்க இந்த நாடி பரிசோதனையுடன் நவீன உடல் பரிசோதனைகளையும் ஒப்பிட்டு நோய்களை துல்லியமாக கணிப்பது நமது மருத்துவமனையின் சிறப்பம்சமாகும்.

கேரள பஞ்சகர்மா

நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்காக ஆயுர்வேதம் நமக்களித்த ஓர் அரிய வாய்ப்பு தான் பஞ்சகர்மா சிகிச்சை. நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி அவற்றை முன்கூட்டியே தடுத்து நிறைவான ஆரோக்கியத்துடன் விளங்க செய்வது இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். கேரள பாரம்பரிய மிக்க இந்த சிகிச்சை முறையானது, உள் மருந்துகளை சார்ந்திராமல், வெளிப்புற சிகிச்சையின் மூலம் அதிக பலனை அளிப்பதால் உலக அளவில் அங்கீகாரமிக்க சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது. அபியங்கம், உழிச்சல், பிழிச்சல், சிரோதாரா, சிரோவஸ்தி, நவரை கிழி, இலைக்கிழி, கடிவஸ்தி, லேபனம், கஷாய தாரா, கஷாய வஸ்தி, தளம், உத்வர்த்தனம் போன்ற இந்த சிகிச்சைகள் உடலை உறுதிப் படுத்துவதுடன், தேவையற்ற கொழுப்பையும், நச்சு தன்மையையும் வெளியேற்றி, சீரான இரத்த ஓட்டத்தையும் எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுவையும் அளிக்கிறது. மேலும் இயல்புக்கு மாறான நரை, திரை, மூப்பு போன்றவற்றை நீக்கி, நோய்கள் வராமல் தடுக்கும் ஓர் முன்னெச்சரிக்கை சிகிச்சை முறை ஆகும்.

வர்மா/தொக்கணம்

அகம் 32, புறம் 32 என்ற அடிப்படையில் சித்த மருத்துவமானது 32 வகையான உள் மருத்துவ சிகிச்சையையும், 32 வகையான வெளி மருத்துவ சிகிச்சையையும் வெவ்வேறாக பிரித்து வழங்கி, வேறு எந்த மருத்துவத்திற்கும் இல்லாத தனி சிறப்பை பெற்றுள்ளது. அக மருந்துகள் என்பது குடிநீர், மாத்திரை, லேகியம், போன்றவற்றை உள்ளுக்குள் அளிப்பது. புற சிகிச்சை என்பது எண்ணெய் குளியல், எண்ணெய் தொக்கணம், எண்ணெய் மசாஜ், மூலிகை ஒத்தடம், மூலிகை பற்று, மூலிகை வேது, தாரா, நஸ்யம், மூலிகை பொடி திமிர்த்தல், மூலிகை எண்ணை ஒழுக்கு, மூலிகை கட்டு, போன்றவற்றை வெளிப்புறமாக அளிப்பது. உடலின் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் வலிகளை போக்குதல், மூட்டு திசுக்கள் மற்றும் முதுகெலும்பிற்கு எண்ணெய் பசையை அதிகரிக்க செய்து தேய்மானத்தை தடுப்பது இதன் முக்கிய பயனாகும். மேலும் வர்ம சிகிச்சை என்பது, சில குறிப்பிட்ட வர்ம புள்ளிகளை தூண்டி விடுவதன் மூலம் உடலின் தடைபட்ட உயிர் சக்தியையும், இரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும் ஓர் தலை சிறந்த மருத்துவ யுக்தியாகும். இந்த சிகிச்சையானது தண்டுவடங்களை சீரமைத்து, நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தை விடுவிக்கவும், உடலுக்குள் பிராண வாயுவை பரவச் செய்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை ஒழுங்கு படுத்தவும் பயன்படுகிறது.

ஆய்வு செய்யப்பட்ட அவிழ்தங்கள்

முறையான நாடி பரிசோதனை மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் உடல் நிலையை நன்கு ஆராய்ந்து நமது மருத்துவமனையிலேயே தயாரிக்கப்படும் மருந்துகளை அளிப்பது எமது சிறப்பம்சமாகும். இங்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பார்முலாக்கள் அனைத்தும் பழமை வாய்ந்த மருத்துவ ஓலைச்சுவடிகளில் இருந்தும், பாரம்பரிய வைத்தியர்களின் மருத்துவ குறிப்புகளில் இருந்தும் முறையான ஆய்வுக்குப்பின் தேர்தெடுக்கப் பட்டவை. அரிய மூலிகைகளை அடையாளம் காணவும், கலப்படமற்ற கடை சரக்குகளை (அங்காடி மருந்துகளை) தேர்ந்தெடுக்கவும், திறன் மிக்க பரம்பரை வைத்தியர்களின் துணையுடனும், மருந்து தாவரவியல் மற்றும் மருந்து அறிவியல் போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளுடன், நமது மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. எனவே அவைகள் உயர்ந்த தரமும், வீரியமும், மிகுந்த பலனும் மிக்கவையாக விளங்குகிறது. 100% பின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகளற்ற இந்த சித்த மருந்துகளால் நோய்கள் நீங்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுவதால் மீண்டும் நோய்கள் அணுகாமல் தடுக்கப்படுகிறது.

சித்தர்களின் வாழ்வியல் வடிவமைப்பு

இயற்கையோடு இணைந்து பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் தன்னுடைய தவ வலிமையாலும், மெய்ஞானத்தாலும் உணரப்பட்டு பின்பற்றிய அறிவியல் அடிப்படையிலான வாழ்வியல் கோட்பாடுகளை பயிற்றுவிப்பது இதன் சிறப்பம்சமாகும். வாத, பித்த, கப மாறுபாடுகளை நிவர்த்திக்கும் உணவு முறைகள், ஒவ்வொரு தனி மனிதனின் உடல் நிலைக்கேற்ற உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தையும், சோர்வையும் நீக்கி, அமைதியும், ஆற்றலும் மிக்க மனதை பெறுவதற்கு சித்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் பரிந்துரைக்க படுகிறது. இதன் மூலம் நவீன வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படுகின்ற உடல் உபாதைகள் தடுக்கப்படுவதுடன், உடல், மனம், ஆன்மா இவைகளின் ஆற்றல் அதிகரிக்கப் பட்டு நோய்கள் திரும்ப வராமல் பாதுகாக்கப் படுகிறது.